ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

அம்மனூர் கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ஞானவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

வளர்ச்சி பணிகள்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் அம்மனூர் ஊராட்சி மன்றம் உள்ளது. இதில் அம்மனூர், அவ்வை நகர், அண்டரசன்பேட்டை, சீனிவாச நகர், துரைசாமி நகர், மேட்டு நகர், எஸ்.வி.ஆர்.நகர், கண்ணன் நகர், எம்.ஆர்.கண்டிகை, மாவேரிப்பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர், அருந்ததிபாளையம் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக அம்மனூர் பகுதியை சேர்ந்த ஜி.ஞானவேல் உள்ளார். ஊராட்சியில் செய்யப்பட்டு உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

அம்மனூர் பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் ரூ.3½ லட்சத்தில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய், அவ்வை நகர் மயானத்திற்கு செல்லும் சாலையில் ரூ.19 லட்சத்தில் சிமெண்டு சாலை, அதே பகுதியில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்தில் மின்மோட்டார், பைப்லைன், வெங்கடேசபுரத்தில் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்திலும், சீனிவாச நகரில் ரூ.6 லட்சத்து 51 ஆயிரத்திலும், மாவேரிபேட்டையில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்திலும் குடிநீர் குழாய்கள் இணைப்பு பணிகள், அண்டரசன்பேட்டையில் ஆழ்துளை கிணறு, எஸ்.வி.ஆர்.நகர், கண்ணன் நகரில் ஜல்லிசாலை, அம்மனூர் குளக்கரை சிவன் கோவில் அருகே சிறுபாலம், துரைசாமி நகர், அண்டரசன்பேட்டை, கம்பன் தெருவில் பைப்லைன், கண்ணன் நகர், புத்தர் தெருவில் சிமெண்டு சாலை உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

மேட்டு நகரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கண்ணன் நகரில் சிமெண்டு சாலை, அம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூ.30 லட்சத்து 20 ஆயிரத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மதுரரெட்டி கண்டிகையில் ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்திலும், கண்ணன் நகரில் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்திலும், அம்மனூரில் ரூ.9 லட்சத்து 96 ஆயிரத்திலும் குடிநீர் குழாய்கள் இணைப்பு பணிகள், அம்மனூர் யாதவர் தெருவில் ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்திலும், அம்மனூர் காலனியில் ரூ.3 லட்சத்து 87 ஆயிரத்திலும் கழிவுநீர் கால்வாய், அண்டரசன்பேட்டையில் ரூ.4 லட்சத்து 7 ஆயிரத்திலும், சீனிவாச நகரில் ரூ.9 லட்சத்து 98 ஆயிரத்திலும் சிமெண்டு சாலைகள், அம்மனூர், கண்ணன் நகர், அம்மனூர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்தில் ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் பைப்லைன் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.

பிரதம மந்தரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் 38 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்

அம்மனூர் ஊராட்சியில் உள்ள அவ்வை நகரில் சமுதாய கூடம், கால்நடை மருத்துவமனை, மகளிர் சுகாதார வளாகம், மகளிர் குழு கட்டிடத்திற்கு சுற்றுச்சுவர், உடற்பயிற்சி கூடம், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், கூடுதலாக ஒரு ரேஷன் கடை, அண்டரசன்பேட்டை, அருந்ததிபாளையம், அம்மனூர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் மற்றும் அம்மனூர் ஊராட்சி அரக்கோணம் நகரத்தையொட்டி இருப்பதால் அரக்கோணத்திற்கு வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் அம்மனூர் கிராமத்திற்கு கிடைக்கவும், அதன் மூலம் மக்கள் பயனடைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பணிகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

ஊராட்சியில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு, போதை பொருள் ஒழிப்பு, கழிப்பிடத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தடையில்லா குடிநீர்

நான் தினமும் வார்டு பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து வருகிறேன். தினமும் வார்டு பகுதிகளில் குப்பைகள் சரியாக அள்ளப்படுகிறதா, குடிநீர் சரியாக வழங்கப்படுகிறதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்து அதில் குறைகள் இருந்தால் அதை உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து வருகிறேன். ஊராட்சியில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் புதிய குழாய் பொருத்தவும், மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின்விளக்குகள் பொருத்தவும், பழுதடைந்த மின்விளக்குகளை உடனுக்குடன் மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்மனூர் ஊராட்சியை முதன்மையான ஊராட்சியாக மாற்ற அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ. சு.ரவி ஒத்துழைப்போடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பி.அம்சா பாலன், வார்டு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பத்மராஜ், கே.தனலட்சுமி, ஜி.வேளாங்கண்ணி, எஸ்.அருளரசி, எம்.வனிதா, ஜெ.மதிவாணன், ஐ.சத்யா, ஜி.கலையரசன், ஊராட்சி செயலாளர் பி.பாளையம் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு மாற்றுவேன்.

இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ஞானவேல் தெரிவித்தார்.


Next Story