இதுவரை 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்
இதுவரை 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
அருப்புக்கோட்டை,
இதுவரை 5 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
வளைகாப்பு விழா
அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் ராஜம் வரவேற்றார்.
சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனங்களை வழங்கியும், ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 143 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.
சீதனப்பொருட்கள்
அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து வீடுகளிலும் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்துவது வழக்கம். வீட்டில் வளைகாப்பு நடத்த முடியாத கர்ப்பிணிகளுக்கு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி வளைகாப்பு மற்றும் சீதனப் பொருட்களை வழங்குகிறோம்.
கர்ப்பிணிகள் பிரசவ காலத்தில் பிரச்சினைகளை புறம்தள்ளிவிட்டு அமைதியான மனதுடன் இருக்க வேண்டும். அப்போது தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
முதியோர் ஓய்வூதியம்
ஆண்களை விட தற்போது பெண்கள் தான் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஜெயிக்கிறார்கள். இதுவரை முதியோர் ஓய்வூதியம் மட்டும் 4 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். இதற்கு முன் முதியோர் ஓய்வூதியம் வாங்கியவர் பலரை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதனைக்கருத்தில் கொண்டு ஆய்வு செய்து தகுதியுடையோர் அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்க அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நகராட்சி ஆணையர் அசோக்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், நகர் நல அலுவலர் இந்திரா, ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் கோமதி, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.