செங்குடி கிராம நிர்வாக அலுவலகம் சீரமைக்கப்படுமா?
குத்தாலம் அருகே சேதமடைந்த செங்குடி கிராம நிர்வாக அலுவலகம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே சேதமடைந்த செங்குடி கிராம நிர்வாக அலுவலகம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலகம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் செங்குடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் மேற்கூரை சேதம் அடைந்து கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. மழைக்காலத்தில் அலுவலகத்தின் உள்ளே நீர்க்கசிவு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். கிராம நிர்வாக அலுவலகத்துக்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். மேலும் கிராம நிர்வாக அலுவலகம் அருகே கோவில், அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன.
சீரமைக்க கோரிக்கை
மழை பெய்யும் போது கிராம நிர்வாக அலுவலகம் இடிந்து விழுந்தால் மிகுந்த அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொதுமக்கள் கூறுகிறாா்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.