பழைய கார்-உதிரி பாகங்கள் எரிந்து நாசம்


பழைய கார்-உதிரி பாகங்கள் எரிந்து நாசம்
x

பழைய கார்-உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது

திருச்சி

திருச்சியை சேர்ந்தவர் சையத் அலி. இவர் திருச்சி அரியமங்கலம் பழைய பால் பண்ணை அருகே கார் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு பழைய காரை உடைத்தெடுத்து அதன் உதிரி பாகங்களை பிரித்து எடுக்கும் பணிகள் நடைபெறும். நேற்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் பணியாளர்கள் பணிக்கு வந்து பழைய காரை உடைத்து உதிரி பாகங்களை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் பழைய கார் ஒன்றின் உதிரி பாகங்களை வெல்டிங் வைத்து பிரித்து எடுத்து கொண்டிருந்தபோது. காரின் சீட் பகுதியில் திடீரென தீ பற்றியது. தொடர்ந்து, காரில் மள, மளவென தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து அருகில் இருந்த காரின் உதிரி பாகங்கள் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ அணையாமல் மேலும் பரவி கொண்டே இருந்தது. பின்னர் இது குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story