நெல் அறுவடை எந்திரம் கவிழ்ந்ததில் மூதாட்டி பலி
செங்கோட்டை அருகே நெல் அறுவடை எந்திரம் கவிழ்ந்து அமுக்கியதில் குட்டையில் மூழ்கி மூதாட்டி பலியானார்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வேம்பநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா மனைவி அழகம்மாள் (வயது 60). இவர் கேசவபுரம் பெட்டைகுளம் பகுதியில் ஒருவரது வயலில் நடைபெறும் அறுவடை பணிக்கு சென்றார். மேலும், அந்த பணிக்கான நெல் அறுவடை எந்திரமும் வரவழைக்கப்பட்டது. இதை செங்கோட்டை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் (30) என்பவர் இயக்கினார்.
அறுவடை பணி முடிந்ததும் அங்குள்ள குட்டையில் அழகம்மாள் கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் நெல் அறுவடை எந்திரத்தை மகேஷ் பின்னோக்கி இயக்கிக் கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக நெல் அறுவடை எந்திரம் நிலைதடுமாறி அழகம்மாள் மீது கவிழ்ந்து அமுக்கியது. இதில் படுகாயம் அடைந்து குட்டை தண்ணீரில் மூழ்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அங்கு வேைல செய்து கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடிச் சென்றனர். இதுகுறித்து உடனடியாக புளியரை போலீசுக்கும், செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, குட்டையில் இறங்கி அழகம்மாள் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்ெபக்டர் ஷியாம் சுந்தர் விசாரணை நடத்தி, அறுவடை எந்திர டிரைவரான மகேசை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.