முதியவர் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைகண்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் முதியவர் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் அரூர் பகுதியை சேர்ந்த அன்சர்கான் (வயது 60) என தெரிய வந்தது. இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரூர் பகுதியில் 1076 அடி நிலத்தை ஒருவரிடம் வாங்க பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை கிரயம் செய்து தராமல் சம்பந்தப்பட்டவர் ஏமாற்றி விட்டதாகவும், இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும், உரிய நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.