விநாயகர் சிலைகளை உடைத்த முதியவர் கைது


விநாயகர் சிலைகளை உடைத்த முதியவர் கைது
x
தினத்தந்தி 9 Sept 2022 7:49 PM IST (Updated: 10 Sept 2022 11:04 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சிலைகளை உடைத்த முதியவர் கைது

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் 3 கோவில்களில் விநாயகர் சிலைகளை உடைத்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்று 48 மணி நேரத்துக்குள் கைது செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பாராட்டினார்.

விநாயகர் சிலைகள் உடைப்பு

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் தெற்கு வாசலில் உள்ள விநாயகர் சிலையின் ஒரு கரம் கடந்த 6-ந் தேதி மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதுபோல் தென்னம்பாளையம் காலனி பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் வெளிப்புற வளாகத்தில் உள்ள விநாயகர் சிலையில் இரு கரங்களும் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் கே.எம்.ஜி.நகர் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சிலையின் இரு கரங்களும் சேதப்படுத்தப்பட்டன.

ஒரேநாளில் 3 இடங்களில் விநாயகர் சிலைகள் குறி வைத்து உடைக்கப்பட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். விநாயகர் சதுர்த்தி விழா நடந்து முடிந்த ஓரிரு நாளில் நடந்த இந்த சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணி, பா.ஜனதா, சிவசேனா கட்சியினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். போலீசிலும் புகார் மனு கொடுத்தனர்.

5 தனிப்படை விசாரணை

விநாயகர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை கண்டறியும் வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் அபினவ்குமார் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் ராஜன், கண்ணையன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிச்சையா, ரமேஷ், ஆனந்த், ரத்தினகுமார், ராஜசேகர் ஆகியோர் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டன.

மதம், அரசியல், சமூக விரோதிகளால் இந்த சம்பவம் நடைபெற்றதா? என்ற கோணங்களில் விசாரணை முடுக்கி விட்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் துப்பு துலக்கினார்கள். இதில் 60 வயது மதிக்கத்தக்க நீல நிற சட்டை, பேண்ட் அணிந்த நபர், ஈஸ்வரன் கோவில் விநாயகர் சிலையை சேதப்படுத்திய பின், தென்னம்பாளையம் காலனி சக்தி மாரியம்மன் கோவில் விநாயகர் சிலை, அதன்பிறகு கே.எம்.ஜி.நகர் காமாட்சியம்மன் கோவில் விநாயகர் சிலைகளை தேசப்படுத்திவிட்டு சென்றது கண்டறியப்பட்டது.

முதியவர் கைது

அதை வைத்து துப்பு துலக்கியதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் திருப்பூர் வெள்ளியங்காடு திரு.வி.க.நகரை சேர்ந்த மருதாச்சலம் (வயது 62) என்பது தெரியவந்தது. அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மருதாச்சலம் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாலும், தனக்கு வாழ்க்கை சரியாக அமையாததால் கடவுள் மேல் வெறுப்பு ஏற்பட்டு கல்லால் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. சிலையை சேதப்படுத்த பயன்படுத்திய கல்லையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சம்பவம் நடைபெற்று 48 மணி நேரத்திற்குள், விநாயகர் சிலைகளை உடைத்தவரை கைது செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.



Next Story