காட்டுயானை தாக்கி முதியவர் பலி
கூடலூரில் காட்டுயானை தாக்கி முதியவர் பலியானார். அவரது உடலை எடுக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கூடலூர்
கூடலூரில் காட்டுயானை தாக்கி முதியவர் பலியானார். அவரது உடலை எடுக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
காட்டுயானை தாக்கியது
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அள்ளூர் வயல் கோடமூலா பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டுயானை நடமாட்டம் இருந்து வந்தது. இதுகுறித்து ஆதிவாசி மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் கருமன்(வயது 73). இவர் நேற்று காலை 11 மணிக்கு தனது வீட்டில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென புதர் மறைவில் நின்றிருந்த ஒரு காட்டு யானை அவரை நோக்கி ஓடி வந்தது. இதை சற்றும் எதிர்பாராத கருமன் அதிர்ச்சியில் உறைந்தார். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை காட்டுயானை தாக்கியது. மேலும் முட்டி கீழே தள்ளி கால்களால் மிதித்தது. இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கருமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
போராட்டம்
இதற்கிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் காட்டுயானை அங்கிருந்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்ற பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் சித்தராஜ், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் வந்து, பொதுமக்களிடம் பல கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
விரட்ட நடவடிக்கை
அப்போது காட்டுயானை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பின்னர், காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும், சாலையோரம் படர்ந்து காணப்படும் காய்ந்த மூங்கில்கள், புதர்கள் அகற்றப்படும், உயிரிழந்த கருமனின் குழந்தைகளில் ஒருவருக்கு வனத்துறையில் பணி வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதை ஏற்று மாலை 3 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கருமனின் உடலை கூடலூர் அரசு ஆஸ்பத்திரி போலீசார் கொண்டு சென்றனர்.