மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் சாவு
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
திருவையாறு:
திருவையாறு அருகே ராயம்பேட்டை, மெயின்ரோட்டை சேர்ந்தவர் சாம்பமூர்த்தி (60), செங்கமேடு பூசாரி தெருவை சேர்ந்தவர் வீரமணி (40). இவர்கள் இருவரும் வீரசிங்கம்பேட்டையில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். திருச்சோற்றுதுறை அய்யனார் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம், பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்சில இருந்த மருத்துவ உதவியாளர் சாம்பமூர்த்தியை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். வீரமணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து நடுக்காவிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்பமூர்த்தி உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.