மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் பலி
ஆற்காடு அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் பலியானார்.
ராணிப்பேட்டையை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 70), ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர், நேற்று காலை மோட்டார் சைக்கிளில் ஆற்காடு வந்துள்ளார். பின்னர் மீண்டும் விளாப்பாக்கம் நோக்கி செல்லும் போது தாஜ்புரா கூட்ரோடு அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்று உள்ளார்.
அப்போது 'ஷூ' கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நடராஜ் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.