மோட்டார் சைக்கிள்கள் மோதலில் முதியவர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதலில் முதியவர் பலி
x

பேரணாம்பட்டில் மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலியானார். மற்றொரு விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

வேலூர்

பேரணாம்பட்டில் மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலியானார். மற்றொரு விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.

முதியவர் பலி

பேரணாம்பட்டு அருகே உள்ள சிந்தகணவாய் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 66) விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (56). கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் சென்னைக்கு செல்வதற்காக குடியாத்தம் ரெயில் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை மனோகரன் ஓட்டிச் சென்றார்.

பேரணாம்பட்டு அருகே உள்ள மொரசப்பல்லி கிராமம் குடியாத்தம் சாலையில் சென்ற போது ஒருவர் சைக்கிளில் குறுக்கே வந்துள்ளார். இதனால் அவர்மீது மோதாமலிருக்க, திடீரென பிரேக் போட்டபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மனோகரன் பலத்த காயமடைந்தார். மஞ்சுளா காயமின்றி உயிர் தப்பினார்.

காயமடைந்த மனோகரன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது சம்மந்தமாக பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு, சப்- இன்ஸ் பெக்டர் தேவபிரசாத் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

பேரணாம்பட்டு டவுன் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் வினோத்குமார் என்கிற அப்பாஸ் (23). இவர் நேற்று முன்தினம் இரவு மருந்து வாங்குவதற்காக வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பேரணாம்பட்டு சிவராஜ் நகரை சேர்ந்த குரு (23) என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிர்புறமாக சென்று, வினோத்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் குரு தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்மந்தமாக பேரணாம்பட்டு சிறப்பு சப்- இன்ஸ் பெக்டர் இளங்கோவன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story