குளத்தில் மூழ்கிய முதியவர் பிணமாக மீட்பு
பாவூர்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கிய முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் கீரைத்தோட்ட தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி நாடார் (வயது 70). இவரது பேரன் அஸ்வின் (வயது 8), அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். சுடலையாண்டி தனது பேரன் அஸ்வினுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதற்காக ஊர் அருகே உள்ள குளத்துக்கு அழைத்து சென்றார். குளத்தில் உள்ள படித்துறையில் இறங்கி, அஸ்வின் உடலில் பிளாஸ்டிக் கேனை கயிற்றால் கட்டி, நீச்சல் பழக தண்ணீருக்குள் அனுப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக அஸ்வின் உடலில் கட்டி இருந்த கயிறு அவிழ்ந்து பிளாஸ்டிக் கேன் விலகியதால் அஸ்வின் தண்ணீரில் தத்தளித்தான். உடனே சுடலையாண்டி அஸ்வினை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, குளத்தில் இறங்கி அஸ்வினை காப்பாற்றினர். ஆனால் சுடலையாண்டியை காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுடலையாண்டியை தேடினர். இரவு 8 மணி வரை தேடியும் கிடைக்காததால் அவர்கள் திரும்பி சென்றனர். நேற்று தீயணைப்பு வீரர்கள் மீண்டும் அவரை தேடினர். அப்போது அவரை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.