காட்டு யானை தாக்கி முதியவர் பலி
மசினகுடி அருகே கால்நடைகளை மேய்க்க சென்ற முதியவர், காட்டு யானை தாக்கி பலியானார்.
கூடலூர்,
மசினகுடி அருகே கால்நடைகளை மேய்க்க சென்ற முதியவர், காட்டு யானை தாக்கி பலியானார்.
கால்நடைகளை மேய்க்க சென்றார்
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 80). இவர் தனது 3-வது மகன் கணபதி என்பவருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து பெருமாள் கால்நடைகளை மேய்க்க சென்றார். பின்னர் அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. ஆனால், கால்நடைகள் மட்டும் வீட்டிற்கு வந்தன. இதையடுத்து உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் பெருமாளை தேடி பார்த்தனர். ஆனால், அவரை காணவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரா வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் இரவு 10.30 மணி வரை வாழைத்தோட்டம் அருகே உள்ள வனப்பகுதியிலும் தேடி பார்த்தனர். இரவு வெகுநேரம் ஆகிவிட்டதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
முதியவர் பலி
இந்தநிலையில் நேற்று காலையில் பெருமாளை தேடும் பணி நடைபெற்றது. அப்போது கல்லட்டி காப்புக்காட்டில் பெருமாள் இறந்த நிலையில் கிடந்தார்.
அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு நடத்திய போது, காட்டு யானைகளின் தடங்கள் பதிவாகி இருந்தது. மேலும் பெருமாளை காட்டு யானை தாக்கி கொன்றது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மசினகுடி போலீசார் மற்றும் சிங்காரா வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டு யானை தாக்கி முதியவர் பலியானதால், கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.