சுற்றுலா வந்தபோது வழி தவறியகர்நாடக முதியவர் உறவினர்களிடம் ஒப்படைப்பு
சுற்றுலா வந்தபோது வழி தவறிய கர்நாடக முதியவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் மின்நகர் அருகே நேற்று முன்தினம் இரவு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்கும், இங்கும் நடந்து சென்று கொண்டிருந்தார். இதை கவனித்த போலீஸ்காரர்கள் மணிகண்டன், சசிகுமார் ஆகியோர் அந்த முதியவரிடம் விசாரித்தபோது அவர் கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த முகமது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை வல்லம் ஜூம்மா பள்ளிவாசலுக்கு அழைத்து வந்தனர். முஸ்லிம் ஜமாத்தார்கள் முதியவர் குறித்தும், முதியவர் வல்லத்தில் இருப்பது குறித்தும் தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதை அறிந்த உறவினர்கள் நேற்று வல்லத்திற்கு வந்தனர். அவர்களிடம் முதியவர் ஒப்படைக்கப்பட்டார். உறவினர்களிடம் போலீசார் விசாரித்தபோது குடும்பத்துடன் வேனில் தமிழகத்தில் உள்ள தர்காக்களுக்கு சுற்றுலா வந்தபோது முதியவர் திருச்சியில் இருந்து வழி தவறி வல்லத்துக்கு வந்தது தெரியவந்தது.