வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசி நாளாகும்.
தஞ்சாவூர்;
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க 31-ந் தேதி கடைசி நாளாகும்.
உதவித்தொகை
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க தகுதிகளானது 1.1.2022 அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
31-ந் தேதி கடைசி நாள்
இதற்கான விண்ணப்பப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதம்தோறும் உதவித்தொகையாக ரூ.3,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) அளிக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.