பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
x
திருப்பூர்

திருப்பூர்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில மாநாடு

தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க 6-ம் மாநில மாநாடு நேற்று காலை திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் தொடக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் ராணி வேலை அறிக்கை வாசித்தார். மாநில பொருளாளர் பிரகலதா வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு சிறப்பித்து பேசினார். திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ்எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக பரமேஸ்வரி, துணை தலைவர்களாக பிரபாவதி, இளஞ்சியம், ராணி, பரமேஸ்வரி, அமுதா, விஜயராணி, பொதுச்செயலாளராக பா.ராணி, இணை செயலாளர்களாக சுமதி, அன்னலட்சுமி, மகேஸ்வரி, தமிழ்செல்வி, பத்மினி, புனிதா, பொருளாளராக ஜெயலட்சுமி, அமைப்பு செயலாளராக பிரகலதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

முதல்-அமைச்சர் தேர்தல் கால வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது சுகாதார துறையில் ஆய்வாளராக பணியில் இணையும் ஒரு ஆண் பெறும் ஊதியம் மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகள், இதே துறையில் கிராம சுகாதார செவிலியர்களாக பணியில் இணைபவர்களுக்கு கிடைப்பதில்லை. சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

30 ஆண்டுகளாக பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும். களப்பணியில் உதவ உதவியாளர் பணியிடம் உருவாக்கி நியமிக்க வேண்டும். கொரோனா பணியில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊர்வலம்

முன்னதாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இருந்து கிராம சுகாதார செவிலியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து மாநாடு நடைபெற்றமண்டபம் வரை சென்றனர்.


Next Story