பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்
பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வருவாய் கிராம ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேலூர் டவுன்ஹாலில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் 2-வது மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர்கள் மணி, ஆதிகேசவன், செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் திருமலைவாசன் கலந்து கொண்டு பேசினார். மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில துணைத் தலைவர் ஆர்.ரவி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
மாநாட்டில், வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஜமாபந்தி படி வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடு காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் நாள் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் கிராம வருவாய் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.