பழமையான கிணற்றை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
நாகூர் பெரியார் தெருவில் உள்ள பழமை வாய்ந்த கிணற்றை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகூர் பெரியார் தெருவில் உள்ள பழமை வாய்ந்த கிணற்றை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழமையான கிணறு
நாகை மாவட்டம் நாகூரில் பெரியார் தெரு உள்ளது. இந்த தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை அந்த தெருவில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக இந்த கிணறு பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் கிணற்றுக்குள் பாசிப்பிடித்து அதில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள்
புதுத்தெரு, மெயின் ரோடு, வள்ளியம்மை நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது கிணற்றுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி செந்தில் கூறுகையில்,
இந்த கிணறு மிகவும் பழமை வாய்ந்த கிணறு. முன்பு இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் குடம் குடமாக எடுத்து செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த கிணற்றின் பயன்பாடு குறைந்து தற்போது பாழடைந்து கிடக்கிறது. மேலும் கிணற்றின் உள்ளே குப்பைகள் நிறைந்து இருப்பதால் கொசு உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தூர்வார வேண்டும்
மேலும் கிணற்றை மூடி உள்ள இரும்பு கம்பிகள் உடைந்து காணப்படுவதால் கால்நடைகள் தவறி கிணற்றுக்குள் தவறி விழும் ஆபத்தும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் வேதனை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிணற்றில் உள்ள குப்பைகளை அகற்றி, தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.