மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
அன்னதானப்பட்டி:-
சேலம் மணியனூர் பொடாரன்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி குழந்தாயம்மாள் (வயது 90). கணவர் ராமசாமி இறந்து விட்ட நிலையில், குழந்தாயம்மாள் மட்டும் வீட்டின் மேல்மாடியில் வசித்து வந்தார். கீழ் மாடியில் மகன் மாதேஷ் வசித்து வருகிறார். நேற்று காலை பேரன் பாட்டிக்கு காபி கொடுப்பதற்காக மாடிக்கு சென்றார். அப்போது குழந்தையம்மாள் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி குழந்தாயம்மாளுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.