ரெயில் மோதி மூதாட்டி சாவு


ரெயில் மோதி மூதாட்டி சாவு
x

ரெயில் மோதி மூதாட்டி சாவு

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

இரணியல் அருகே ஆளூருக்கும், இரணியல் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் நேற்று இரவு ஒரு மூதாட்டி பிணம் கிடந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பழனி மற்றும் போலீஸ்காரர் இசக்கிமுத்து ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றினா். பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பிணமாக கிடந்தவர் குளச்சல் வாணியக்குடியை சேர்ந்த பிலோமினாள் (வயது 63) என்பது தெரியவந்தது. இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். பிலோமினாள் மனநிலை பாதிக்கப்பட்டவர். இதனால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவார். பின்னர் உறவினர்கள் அவரை தேடி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற பிலோமினாளை இரவு வெகுநேரம் ஆகியும் உறவினர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எங்கெங்கோ சென்ற பிலோமினாள் கடைசியாக ரெயில் தண்டவாளத்தில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி அவர் பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story