மூதாட்டி கொலை வழக்கு: முன்னாள் கவுன்சிலருக்கு 10 ஆண்டு ஜெயில்-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
மேச்சேரி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் முன்னாள் கவுன்சிலருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
வாக்குவாதம்
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மூலங்காடு பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 64). அவருடைய மகன் பரமசிவம் (35). இவர் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வீட்டின் அருகே தாழ்வாக இருந்த பொது குடிநீர் குழாயில் குடத்தை வைத்து தண்ணீர் பிடிப்பதற்காக குழி தோண்டி கொண்டிருந்தார்.
அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் குமார் (43) என்பவர் அதனை தட்டிக்கேட்டார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குமார் ஆத்திரமடைந்து பரமசிவத்தை தாக்க முயன்ற போது அவரது தாயார் சின்னம்மாள் (58) தடுக்க முயன்றார். இதனால் அவர் தாக்கப்பட்டு கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
10 ஆண்டு சிறை
அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மூதாட்டியை கொலை செய்த குற்றத்திற்காக குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு அளித்தார்.