ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவிகள் சந்திப்பு


ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவிகள் சந்திப்பு
x

ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவிகள் சந்திப்பு

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரை நூற்றாண்டுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 50 வருடங்களுக்கு முன் படித்த 66 வயதை கடந்தவர்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

எங்கும் நிலவிய மகிழ்ச்சி

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை படித்த மாணவிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக 1972 முதல் 1990 வரை படித்த மாணவிகளும் அதிக அளவில் கலந்து கொண்டது விழாவின் சிறப்பு அம்சமாக இருந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் மாணவிகள் நீண்ட வருடங்களுக்குப்பிறகு தங்களுடன் படித்தவர்களையும், சக தோழிகளையும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஒருவருக்கொருவர் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் செல்போனில் 'செல்பி' எடுத்தும் மகிழ்ந்தனர். சிலர் தோழிகளை ஆரத்தழுவி உள்ளம் பூரித்தனர். விழாவில் ஆங்காங்கே கூடி நின்றபடி பேசியவாறு இருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி மயமான காட்சிகள் இருந்தது. சிலர் ஆனந்த கண்ணீர் வடித்த நிகழ்வையும் காண முடிந்தது.

மீண்டும் சிறு வயது...

இதேபோல், பலர் பள்ளி வளாகத்தையும், தங்கள் வகுப்பறையையும் சுற்றி பார்த்தனர். சிலர் வகுப்பறையில் அமர்ந்து பழைய நினைவுகளை அசைபோட்டனர். இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி சிறப்புரையாற்றினார். மேலும், முன்னாள் மாணவிகள் பலர் கவுரவிக்கப்பட்டனர். இதேபோல், பலர் பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கினர். இதில் 66 வயதை கடந்து விட்ட முன்னாள் மாணவிகள் பேசும் போது, இங்கு வந்ததும் எங்களுக்கு கடந்த கால நினைவுகள் தான் வருகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் சிறு வயது வராதா? இங்கு மீண்டும் படிக்க மாட்டோமா? என்று ஆசையாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் பேசினர்.

இந்த விழாவில் முன்னாள் மாணவிகள் கொண்ட விழா அமைப்பாளர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், விழாவில் பங்கேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.


Next Story