ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன


ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆலிவர் ரெட்லிஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆலிவர் ரெட்லிஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.

ஆலிவர் ரெட்லி

வங்க கடலில் ஆலிவர் ரெட்லி எனும் அரிய வகை ஆமை இனங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் அழிந்து வரும் இனமான ஆலிவர் ரெட்லி எனும் கடல் ஆமைகள் பல்லாயிரம் மைல்கள் கடந்து வங்காள விரிகுடா கடலோரம் இரவு நேரங்களில் முட்டை இட்டுச் செல்லும். இந்த முட்டைகளின் இனப்பெருக்கத்துக்கு நாய்கள், நரிகள் மற்றும் மனிதர்களால் ஆபத்து உள்ளது.

எனவே கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, ஆமை முட்டை பொரிப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது. இதன் ஆயுள் காலம் 150 ஆண்டுகள் முதல் 450 ஆண்டுகள் வரை.

வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

இந்த வகை ஆமை இனங்கள் மீன்களின் பெருக்கத்துக்கு வழி செய்கிறது. மீனவர்கள் எந்திர படகுகளின் முன்பக்க ரக்கையில் மாட்டி அதிக அளவில் ஆமைகள் அடிபட்டு இறந்து கடற்கரையில் ஒதுங்குகின்றன.

கடலாமைகள் மீனவ நண்பன் என்பதால் இதை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

263 முட்டைகள்

நாகப்பட்டினம் வனஉயிரினக் கோட்டம் வேதாரண்யம் வனச்சரகத்தை சேர்ந்த கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறை பகுதிகளில் ஆமைகள் பாதுகாப்பு காவலர்களை கொண்டு அரியவகை ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

இவை நவம்பர் மாதம் முதல் பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வரப்படுகிறது. கோடியக்கரை ஆமைகள் பொரிப்பகத்தில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி மற்றும் 9-ந் தேதி ஆகிய 2 நாட்களும் 263 முட்டைகள் சேகரம் செய்து வைக்கப்பட்டது.

245 குஞ்சுகள்

அதில் 245 முட்டைகள் குஞ்சு பொரித்துள்ளன. இந்த நிலையில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், வனஉயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா ஆகியோரின் அறிவுரையின்படி வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில், வனவர் பெரியசாமி, வனவர் இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர்கள் லோகநாதன், நவநீதகிருஷ்ணன், வேதமூர்த்தி, கடல்ஆமைகள் காவலர் நடேசன் உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் நேற்று கோடியக்கரை கடலில் 245 ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டனர்.

கோடியக்கரை- ஆறுகாட்டுத்துறை

இதுவரை கோடியக்கரையில் 63, ஆறுகாட்டுத்துறையில் 66 ஆமைகளில் இருந்து 13 ஆயிரத்து 71 முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் இதுவரை 3 முறை 1,050 ஆமை குஞ்சுகள் கடலில் விடபட்டுள்ளன என கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.


Next Story