வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்கக்கோரி கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்- வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க போவதாகவும் அறிவிப்பு
வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்கக்கோரி கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கை நிறைவேறா விட்டால் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க போவதாகவும் அறிவித்தனர்.
நம்பியூர்
வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்கக்கோரி கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கை நிறைவேறா விட்டால் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க போவதாகவும் அறிவித்தனர்.
விவசாயிகள் போராட்டம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்று ஒரு தரப்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கீழ்பவானி வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறப்பு தேதி அறிவிக்கப்படவில்லை. அதனால் வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோரிக்கை பதாகை
இந்தநிலையில் நேற்று காலை நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வருகிற 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடவேண்டும், கீழ்பவானி வாய்க்காலில் எந்த கான்கிரீட் பணியையும் செய்ய கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், பேனர்களையும் கைகளில் வைத்திருந்தனர்.
தேர்தல் புறக்கணிப்பு
வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தேதியை அறிவிக்காவிட்டால் வருகிற 11-ந் தேதி ஈரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம். மேலும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் பணிகளை தொடர்ந்தால் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து விட்டு அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.