டீசல் இல்லாமல் நின்ற அரசு பஸ் மீது மினி லாரி மோதி 2 பேர் பலி


டீசல் இல்லாமல் நின்ற அரசு பஸ் மீது மினி லாரி மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

டீசல் இல்லாமல் நின்ற அரசு பஸ் மீது மினி லாரி மோதி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

டீசல் இல்லாமல் நின்ற அரசு பஸ்

திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் ஒன்று, தூத்துக்குடியை நோக்கி வந்தது. இந்த பஸ்சை நெல்லை தாழையூத்து பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 57 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி நான்குவழிச்சாலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பஸ் சென்று கொண்டிருந்தபோது டீசல் இல்லாமல் திடீரென அந்த பஸ் சாலையோரம் நின்றதாக கூறப்படுகிறது.

2 பேர் பலி

அப்போது, தூத்துக்குடிைய நோக்கி இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி, சாலையோரம் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது மோதியது. இதனால் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினி லாரியின் முன்பகுதி நொறுங்கியது.

மினி லாரி கிளீனர் அசாம் மாநிலத்தை சேர்ந்த அசாஹருல் இஸ்லாம் (வயது 19) சம்பவ இடத்திலேயே பலியானார்.

பஸ் கவிழ்ந்ததால் பயணிகள் அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பஸ்சில் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டனர். காயம் அடைந்த பயணிகள் 15 ேபரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிவகங்கையை சேர்ந்த சின்னத்தம்பி (49) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, "டீசல் குறைவாக இருப்பதை கவனிக்காமல் ஓட்டிவந்ததால் விபத்து நடந்ததாக கூறுகிறார்கள். அதே நேரத்தில் பஸ் திடீரென நின்றபோது பஸ்சில் விளக்குகள் எதுவும் எரியவில்லை. இதுவும் விபத்துக்கு ஒரு காரணம். எனவே பஸ்களை சரியாக பராமரித்து இருந்தால், இந்த விபத்து நடந்து இருக்காது" என தெரிவித்தனர்.


Related Tags :
Next Story