கோவில்பட்டியில்மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவரை கடத்தி தாக்கிய 6பேர் கைது
கோவில்பட்டியில்மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவரை கடத்தி தாக்கிய 6பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் கல்லூரி மாணவரை கடத்தி தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மாணவர்கள் மோதல்
கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கடந்த 19-ந்தேதி தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி மற்றும் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு செய்முறை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சி முடிந்ததும் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் கோவில்பட்டி கதிர்வேல் நகரை சேர்ந்த நசீர் மகன் அப்துல் (வயது 19) என்பவருக்கும், சக கல்லூரி மாணவர் சந்தோஷ் உள்ளிட்ட சில மாணவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர்.
மோட்டார் சைக்கிளில் கடத்தல்
நேற்று முன்தினம் மாலையில் மாணவர் அப்துல் தனியார் பார்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சந்தோஷ் உள்பட சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். திடீரென்று அப்துல்லை மோட்டார் சைக்கிள் ஏற்றி கடத்திச் சென்று, கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனராம். இதில் பலத்த காயம் அடைந்த அப்துல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
6 பேர் கைது
இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.