மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பஸ் டிரைவர் பலி:நண்பர் படுகாயம்
ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பஸ் டிரைவர் பலியானார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 59). அரசு பஸ் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (62). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் டி.சுப்புலாபுரம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் டி.சுப்புலாபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
அங்கு தேனி-மதுரை சாலையை கடப்பதற்காக நின்றனர். அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக இறந்தார். ராமநாதன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் சரக்கு லாரி டிரைவரான வருசநாடு பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.