உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது மேலும் 2 வழக்குகள்


உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது மேலும் 2 வழக்குகள்
x

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.

திருநெல்வேலி

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்

நெல்லை மாவட்டம் அம்பை கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

7 மணி நேரம் விசாரணை

இதற்கிடையே பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகராணி, அம்பை கோட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. ஆர்கனைஸ்ட் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் நேற்று முன்தினம் சுமார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் 2 வழக்குகள்

இந்த நிலையில், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் 17 வயது சிறுவனுக்கு பற்கள் பிடுங்கப்பட்டதாக அருண்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4 பிரிவுகளில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் மேலும் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வேதநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.டி.ஐ. போலீசார் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் குறித்த விசாரணைக்கு ஆஜராக 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story