ஆதித்தனார் கல்லூரி சார்பில்நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 48 சார்பில், வெள்ளாளன்விளை கிராமத்தில் 'தூய்மை பணியில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் சிறப்பு முகாம் ஒரு வாரம் நடந்தது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். வெள்ளாளன்விளை தூய திரித்துவ ஆலய சேகர தலைவர் தினகரன் சாலமன், சுரேகா தினகரன் சாலமன், பஞ்சாயத்து தலைவர்கள் பரமன்குறிச்சி லங்காபதி, வெள்ளாளன்விளை ராஜரத்தினம், முன்னாள் விலங்கியல் துறை தலைவர் சாமுவேல், ஆலய பரிபாலன கமிட்டி செயலாளர் சாமுவேல் ஞானபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாம் நாட்களில் மாணவர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகள், சமூகசேவைகள், விழிப்புணர்வு பேரணிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தினர். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. இயற்கை விவசாயி முரளி, ஆசிரியர் நாராயணன் ஆகியோர் உரையாற்றினர். இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர்கள் வான்மதி, ஸ்ரீவிக்னேஷ்வரி ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை, மருந்து மாத்திரைகள் வழங்கினர். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், ஐடியல் குரூப் அருள்ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாம் நிறைவு நாளில் கல்லூரி முதல்வர் மகேந்திரன் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை வாழ்த்தி பேசினார். ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கவிதா செய்து இருந்தார்.