பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு விண்ணப்பம்


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில்  கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு விண்ணப்பம்
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இணையதளம் உள்ளது. அதில், புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதுபோல், புதிதாக உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பணி டிசம்பர் 15-ந்தேதி தொடங்கி, வருகிற ஜனவரி 20-ந்தேதி வரை நடக்கிறது. அரசு இணையதள முகவரியான http://www.bcmbcmw.tn.gov.in என்பதில் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story