ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில் சிறுவர்-சிறுமிகளுக்கு சிறப்பு சுற்றுலா


ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில்  சிறுவர்-சிறுமிகளுக்கு சிறப்பு சுற்றுலா
x

ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில், சிறுவர் -சிறுமிகள் சிறப்பு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில், சிறுவர் -சிறுமிகள் சிறப்பு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

சிறுவர்-சிறுமிகள் மன்றங்கள்

தமிழக போலீஸ் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கருங்கல்பாளையம், மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, பவானி, சித்தோடு, கோபி, கவுந்தப்பாடி, பங்களாப்புதூர், புளியம்பட்டி ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளில் சிறுவர், சிறுமிகள் மன்றங்கள் உள்ளன. இந்த மன்றங்களில் புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நிர்வாகத்திற்காக பொறுப்பாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 11 மன்றங்களை சேர்ந்த 95 சிறுவர் -சிறுமிகளுக்கு, போலீஸ், அரசு துறைகளின் செயல்பாடுகள், போலீஸ்துறை-பொதுமக்கள் நல்லுறவு மற்றும் பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறப்பு சுற்றுலா

அதன்பேரில் நேற்று முன்தினம் காலையில் போலீஸ் வாகனங்கள் மூலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில், 2 பிரிவாக சிறுவர் -சிறுமிகள் பிரிக்கப்பட்டு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதில் ஒரு பிரிவினர் ஈரோடு மாவட்ட போலீஸ் அலுவலகம், ரெயில் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு, உள்ளாட்சி அலுவலகம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், போக்குவரத்து பூங்கா, தலைமை தபால் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மற்றொரு பிரிவு சிறுவர், சிறுமிகள் கோபி வேட்டைக்காரன் கோவில் சிறுவர் பூங்கா, தீயணைப்பு நிலையம், கொடிவேரி அணை, பவானிசாகர் அணை மற்றும் சத்தியமங்கலம் சிறப்பு இலக்கு படை முகாம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது போலீஸ் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் இதர அரசு துறைகளில் நடைபெறும் செயல்பாடுகள் மற்றும் அவற்றை அணுகும் முறைகள் குறித்து சிறுவர், சிறுமிகள் புரிந்துகொள்ள தக்க வகையில் எளிய முறையில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. மேற்கண்ட சிறப்பு சுற்றுலாவை முடித்து திரும்பிய சிறுவர் -சிறுமிகளிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், உரையாடி அவர்களது கருத்துகளை கேட்டறிந்து ஊக்குவித்தார்.


Next Story