தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு ஜீவாமிர்த விழிப்புணர்வு
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கூடலூர் அருகே விவசாயிகளுக்கு ஜீவாமிர்த விழிப்புணர்வு மேளா நடைபெற்றது.
கூடலூர்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கூடலூர் அருகே விவசாயிகளுக்கு ஜீவாமிர்த விழிப்புணர்வு மேளா நடைபெற்றது.
விழிப்புணர்வு மேளா
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விவசாயிகளுக்கு ஜீவாமிர்த விழிப்புணர்வு மேளா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஜீவாமிர்த மேளாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஜீவாமிர்தம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் மானியத்துடன் ரூ.5 லட்சம் செலவிலான மினி லாரியை பயனாளி ஒருவருக்கும், பின்னர் விவசாய உபகரணங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். முன்னதாக வனத்துறை அமைச்சர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
1 லட்சம் லிட்டர் ஜீவாமிர்தம்
மண்வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நீலகிரியில் இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அங்கக வேளாண்மைக்கு என 3750 எக்டேர் பரப்பிற்கு 133.25 லட்சம் செலவில் மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்காக ரூ.261.25 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அங்கக வேளாண்மைக்கு என 2175 எக்டர் பரப்பளவு ரூ.66.25 லட்சம் செலவில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 675 எக்டேர் பரப்பளவில் அங்கக வேளாண்மைக்கு என ரூ.33.75 லட்சம் செலவில் இடு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மண்ணில் ரசாயன உரங்களின் கலப்பை குறைக்க இயற்கை உரமாக ஜீவாமிர்தம் ஓர் உயிர்ச்சத்தாக விளங்குகிறது. இதை விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேளா நடத்தப்படுகிறது. 600 விவசாயிகள் இணைந்து ஒரு லட்சம் லிட்டர் ஜீவாமிர்தம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் விவசாயத்துக்கு ஜீவாமிர்த கரைசலை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாத்து விளைச்சலை மேம்படுத்த விவசாயிகள் முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி, உதவி இயக்குனர் விஜயலட்சுமி, ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில், துணைத்தலைவர் ரெஜிமேத்யூ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன் குமாரமங்கலம், ஸ்ரீதரன் உள்பட அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.