மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து கையெழுத்து இயக்கம்
தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களையும், நடுத்தர மக்களையும், சிறு குறு தொழில் செய்பவர்களையும், சிறிய, நடுத்தர வியாபாரிகளையும் பெரிதும் பாதிப்படையச் செய்து உள்ளது. மின்கட்டண உயர்வால் பல்வேறு உணவுப்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகையால் உடனடியாக மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். 2 மாதத்துக்கு ஒருமுறை மின்அளவீடு செய்வதற்கு பதில் மாதம் ஒருமுறை மின்அளவீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர இளைஞரணி செயலாளர் சார்லஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். தொடர்ந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பொதுமக்களை சந்தித்து கையெழுத்து பெற்றனர். இந்த கையெழுத்து பிரதிகளை முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாநகர செயலாளர் ராஜா செய்து இருந்தார்.