தூத்துக்குடியில் பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில்இலவச கம்ப்யூட்டர், தையல் பயிற்சி மையம்:அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச கம்ப்யூட்டர், தையல் பயிற்சி மையத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச கம்ப்யூட்டர், தையல் பயிற்சி மையத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று காலை திறந்து வைத்தார்.
பயிற்சி மையம்
தூத்துக்குடி பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் இலவச கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி மையத்தில் அருணாதேவி தையல் பயிற்சியாளராகவும், கவிதா கம்ப்யூட்டர் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அமைச்சர் பேச்சு
இது குறித்து அமைச்சர் கீதாஜீவன் கூறும் போது, மறைந்த எனது தந்தையார் பெயரில் கல்வி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, பல்வேறு சமூக பணிகளும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பெண்கள் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற்றம் பெற அவர்களுக்கென சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் அரசு பணித் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாகவும், போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிதாக அகாடமி தொடங்க உள்ளோம். இந்த பயிற்சி மையத்தை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.