நீதிமன்றங்கள் சார்பில் பவானி, பெருந்துறை, கொடுமுடியில்சமரச வார விழிப்புணர்வு ஊர்வலம்


நீதிமன்றங்கள் சார்பில் பவானி, பெருந்துறை, கொடுமுடியில்சமரச வார விழிப்புணர்வு ஊர்வலம்
x

நீதிமன்றங்கள் சார்பில் பவானி, பெருந்துறை, கொடுமுடியில் சமரச வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஈரோடு

நீதிமன்றங்கள் சார்பில் பவானி, பெருந்துறை, கொடுமுடியில் சமரச வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பவானி

ஈரோடு மாவட்ட நீதித்துறை சமரச மையங்கள் அனைத்து கோர்ட்டுகளிலும் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சமரச மையங்கள் மூலமாக வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்படுகின்றன. இதன் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்கவும், கால விரயத்தை தடுக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமரச வார விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பவானியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் சார்பில் சமரச விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீதிபதி முனிராஜ் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை மாவட்ட கூடுதல் நீதிபதி லதா, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஆப்பக்கூடலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் பவானி வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் பவானி பஸ் நிலையம், தாசில்தார் அலுவலகம், அந்தியூர்- பவானி பிரிவு, மேட்டூர் ரோடு உள்பட பவானியின் முக்கிய பகுதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சமரச வழக்குகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பியபடியும் சென்றனர்.

பெருந்துறை

இதேபோல் பெருந்துறை சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சமரச வார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பெருந்துறை கோர்ட்டு முன்பு தொடங்கிய ஊர்வலத்தை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான கே.கிருஷ்ணபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்து நடந்து சென்றார். ஊர்வலத்தில் நீதிபதி பி.ஸ்ரீதேவி, மாஜிஸ்திரேட்டு எஸ்.விபிசி, சமரச மைய வக்கீல்கள் சி.எம்.ரவி, என்.டி.சுப்பிரமணியன், எம்.வெங்கடேஷ் மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள், சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். குன்னத்தூர் ரோடு மற்றும் பெருந்துறையின் முக்கிய ரோடுகள் வழியாக இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்தின் போது கோர்ட்டுகளில் இயங்கி வரும் சமரச மையங்களின் பயன்கள், பொதுமக்கள் எப்படி அணுகுவது. சமரச மையங்கள் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு கொண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

கொடுமுடி

கொடுமுடி அருகே சாலைப்புதூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் சார்பில் நேற்று சமரச வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கொடுமுடி குற்றவியல் நீதித்துறை நடுவர் லோகநாதன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் நீதிமன்றத்தில் தொடங்கி சாலைப்புதூரில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் சமரச மைய வக்கீல்கள் சுப்ரமணியன், பரமசிவம், மகேஸ்வரி மற்றும் கொடுமுடி வக்கீல்கள் அனைத்து நிலை நீதிமன்ற பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story