மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்4,724 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை;அரசின் நலத்திட்ட உதவியை பெற்றவர்கள் மகிழ்ச்சி


ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 ஆயிரத்து 724 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டதன் மூலம் நலத்திட்ட உதவிைய பெற்ற மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 ஆயிரத்து 724 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டதன் மூலம் நலத்திட்ட உதவிைய பெற்ற மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் அட்டை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் அடையாளப்படுத்தப்படுவது, அவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

2022-2023 நிதி ஆண்டில் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 1.996 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. 4 ஆயிரத்து 724 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் பராமரிப்பு உதவித்தொகை, மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு உதவித்தொகை, தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு தொகை என பல்வேறு உதவித்தொகைகளை மாற்றுத்திறனாளிகள் பெற்று வருகிறார்கள். தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கான பராமரிப்பு தொகை என பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு உள்ளன.

மகிழ்ச்சி

வங்கி கடன் மானியம், ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் அமைக்க நிதி மானியம், திருமண உதவித்தொகை, மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் எந்திரம், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களும் வழங்கப்பட்டு உள்ளன. காதொலி கருவிகள், பார்வையற்றவர்கள், செவித்திறன் குறைந்தவர்களுக்கான பிரத்யேக செயலியுடன் கூடிய செல்போன்கள் என அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கும் மொத்தம் ஒரு ஆண்டில் ரூ.19 கோடியே 15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் பெற்ற மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது:-

ஆவின் பாலகம்

டி.என்.பாளையம் காட்டு வீதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மனைவி கோவிந்தம்மாள்:-

போலியோ காரணமாக எனக்கு 80 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது. கல்லூரி படிப்பு முடித்து இருக்கிறேன். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது எனக்கு மாதம் தோறும் மாற்றுத்திறனாளி உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது குடும்ப செலவுக்கு பெரும் உதவியாக உள்ளது. தற்போது கூட்டுறவு வங்கி கடன் மூலம் பவானிசாகர் அணை பூங்காவில் ஆவின் பாலகம் நடத்த அனுமதியை அரசு அளித்து உள்ளது. இதனால் எங்கள் வாழ்க்கைத்தரம் உயரும். மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் அக்கறை காட்டி உதவிகள் செய்து வரும் முதல்-அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

செல்போன்

பெருந்துறை தாலுகா சுள்ளிபாளையம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கருப்பணசாமி:-

நான் கல்லூரியில் படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டு, பார்வை இல்லாத நிலை உருவானது. எனக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தி வருகிறோம். நான் அரசு வேலைக்கான போட்டித்தேர்வு எழுதி வருகிறேன். ஆனால் பார்வை குறைபாடு காரணமாக என்னால் சரியாக படிக்க முடியாத நிலை இருந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தேன். அதன்பேரில் உடனடியாக எனக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி படித்து, தேர்வு எழுதியதில் அதிக மதிப்பெண் பெற்றேன். இதனால் எப்படியும் என்னால் அரசு வேலைக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்து உள்ளது. இந்த உதவியை செய்த தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story