கூடலூர் பூக்கடை வீதியில்அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்:பொதுமக்கள் அவதி
கூடலூர் பூக்கடை வீதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கூடலூர் நகர பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மெயின் பஜார் மற்றும் பூக்கடை வீதிகளுக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். கூடலூர் மட்டுமின்றி சுற்றுப்பகுதியில் உள்ள ஆங்கூர்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இங்கு வரும் மக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். மேலும் காலை முதல் மாலை வரை ஏராளமான சரக்கு வாகனங்களும் இங்கே வந்து சரக்குகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் அதிக அளவில் கூடும் பூக்கடை வீதி, மெயின் பஜார் வீதிகளில் விதிகளை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படும் விதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.