ஆன்லைன் ரம்மியால் கடனில் சிக்கிய வாலிபர் தற்கொலை
விளாத்திகுளம் அருகே ஆன்லைன் ரம்மியால் கடனில் சிக்கிய வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய வாலிபர் கடனில் சிக்கியதால் தூக்கு ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமணன் என்பவரின் மகன் பூபதிராஜா (வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பவர் பிளான்ட்டில் வேலை பார்த்து வந்தார். அத்துடன் சிறு சிறு எலக்ட்ரிக்கல் வேலைகளையும் அவர் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 22-ந்தேதி இரவு பணிக்கு சென்று விட்டு மறுநாள் 23-ந் தேதி காலை வீட்டிற்கு வந்துள்ளார்.
தூக்கு போட்டு தற்கொலை
சிறிது நேரத்தில் அருகிலுள்ள சிப்பிக்குளத்திற்கு எலக்ட்ரிக்கல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், பூபதிராஜாவின் செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடினர்.
பக்கத்து தெருவிலுள்ள குடும்பத்திற்கு சொந்தமான மற்றொரு வீட்டில் சென்று பார்த்தபோது, அங்கு பூபதிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளார்.
போலீசார் விசாரணை
இதனைக் கண்டு பதறிப்போன குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த குளத்தூர் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று பூபதி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பூபதி ராஜாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவரது குடும்பத்தினரிடம் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆன்லைன் ரம்மியால் விபரீதம்
அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, தொடர்ந்து அவர் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக, தனது தாயாருக்கு வாட்ஸ்-அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை உருக்கமாக பேசி அனுப்பி உள்ளார்.
அதில், என்ன மன்னிச்சிடுமா... ஆன்லைன் ரம்மி விளையாட நான் ஏகப்பட்ட கடன் வாங்கிட்டேன்.. உன் தங்கி சங்கிலி ஒன்றையும் ரூ.40 ஆயிரத்துக்கு அடகு வச்சுட்டேன். ரூ.1½ லட்சம் கடன் தொகையில் நான் ரூ.30 ஆயிரம் எடுத்திருக்கேன்,
அதுபோக இந்த மாசம் லோனுக்கான தவணை ரூ.6 ஆயிரத்தையும் எடுத்த செலவு பண்ணிட்டேன். உடன் பணியாற்றும் ஒருவரிடம் ரூ.2 ஆயிரம் வாங்கியிருக்கேன். இந்த மாசம் சம்பளத்தையும் செலவு பண்ணிட்டேன. மன்னிச்சிரு என பேசியுள்ளார்.
இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.