மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது


வல்லநாடு அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

வல்லநாடு அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் சோதனை

ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு, முறப்பநாடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் அடிக்கடி வாகனங்களில் கஞ்சா கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஊரக போலீஸ் உதவி சூப்பிரண்டு சந்தீஸ் மேற்பார்வையில் நேற்று முறப்பநாடு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் தனிப்படை போலீசார் முறப்பநாடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கஞ்சா கடத்தல்

அப்போது வல்லநாடு-மணக்கரை சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் 2 மோட்டார் சைக்கிள்களில் 2 வாலிபர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தனர். போலீசார் அந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அந்த மோட்டார் சைக்கிள்களில் 2கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரிய வந்தது. அந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தானர்.

2 வாலிபர்கள் கைது

போலீசாரின் தொடர் விசாரணையில், அவர்கள் நெல்லை மாவட்டம் தேநீர்குளம் பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் சீத்தாராமன் (வயது 25) மற்றும் நெல்லை தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஆகியோர் என தெரிய வந்தது. இது தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த கஞ்சாவை எங்கிருந்து யாருக்கு கடத்தி சென்றனர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story