டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை மூடைகளாக கட்டி தூக்கி வந்த கும்பல்-போலீசாரை கண்டதும் ஓட்டம்
திருச்சுழி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை திருடி மூடையாக கட்டி தூக்கி வந்த கும்பல் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை திருடி மூடையாக கட்டி தூக்கி வந்த கும்பல் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தது.
மூடையாக கட்டி தூக்கி வந்தனர்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.
இங்கு விடத்தக்குளம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 32), பாலகிருஷ்ணன் (36) ஆகியோர் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த கடை மேற்பார்வையாளராக இருளாண்டி என்பவர் உள்ளார். நேற்று அதிகாலை 2 மணி அளவில், அந்த டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து 3 பேர் கடைக்குள் புகுந்தனர். இவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்தனர். பின்னர் டாஸ்மாக் கடையில் இருந்த மதுபான பாட்டில்களை மூடைகளாக கட்டி கடையை விட்டு வெளியே தூக்கி வந்தனர்.
தப்பியோட்டம்
அப்போது வீரசோழன் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் மர்ம நபர்கள், மதுபான பாட்டில்கள் அடங்கிய மூடைகளை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதனையடுத்து விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளை முயற்சி நடந்த டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்யப்பட்டது.
வீரசோழன் டாஸ்மாக் கடையில் இருந்த பணத்தை வங்கியில் செலுத்த ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் பணம் தப்பியது.
டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி குறித்து வீரசோழன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் தொடர்ந்து டாஸ்மாக் கடையை குறி வைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.