வருகிற 15-ந் தேதி விருதுநகரில் தி.மு.க. முப்பெரும் விழா


வருகிற 15-ந் தேதி விருதுநகரில்  தி.மு.க. முப்பெரும் விழா
x

விருதுநகரில் வருகிற 15-ந் தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்குகிறார்.

விருதுநகர்

விருதுநகரில் வருகிற 15-ந் தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்குகிறார்.

முப்பெரும் விழா

விருதுநகர்-சாத்தூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பட்டம் புதூர் கலைஞர் திடலில் தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் பரிசு வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 4 மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சி பணியில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்கப்படுவதுடன், விருது வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.

2022-ம் ஆண்டிற்கான பெரியார் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பூரணம் சாமிநாதன், அண்ணா விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட கோவை இரா. மோகன், கலைஞர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., பாவேந்தர் விருதுபெறும் புதுச்சேரி திருநாவுக்கரசு, பேராசிரியர் விருதுபெறும் விருதுநகர் மாவட்டம் குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இ்ந்த விழாவில் பரிசுகளையும், விருதுகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் விழாவில் கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்று பேசுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட செயலாளர்களான அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன் (விருதுநகர்), தங்கபாண்டியன் (ராஜபாளையம்), கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story