ஆண்டிப்பட்டியில்நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்:கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஆண்டிப்பட்டியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
உணவு பாதுகாப்பு துறை சார்பில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகன திட்ட தொடக்க விழா ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு உணவு பகுப்பாய்வு வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அதன் செயல்பாடுகள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வக வாகனம் தாலுகா அலுவலகத்தில் இருந்து மதுரை சாலை வழியாக சென்றது.
அப்போது சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் உணவு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? தரமானதாக உள்ளதா? என்பது குறித்து நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் தரம் இல்லாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும், பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்தால் சம்பந்தப்பட்ட கடைகளில் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இன்னும் ஒரு மாதம் தேனி மாவட்டத்தில் பல பகுதிகளில் இந்த நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகன ஆய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன், ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால் மற்றும் வருவாய், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.