மஞ்சளாறு அணையின் கரையோரத்தில்மண் அரிப்பை தடுக்க ரூ.2¼ கோடியில் திட்ட பணி:அதிகாரிகள் ஆய்வு


மஞ்சளாறு அணையின் கரையோரத்தில்மண் அரிப்பை தடுக்க ரூ.2¼ கோடியில் திட்ட பணி:அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையின் கரையோரத்தில் மண் அரிப்பை தடுப்பதற்காக ரூ.2¼ கோடியில் திட்ட பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி

மஞ்சளாறு அணை

மாநிலம் முழுவதும் உள்ள அணைகளின் கரையோரங்களில் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து கரைகளை சீரமைப்பதற்காக ஆண்டுதோறும் அரசுக்கு செலவு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கண்மாய் மற்றும் குளங்களில் உள்ள கரைகளில் ஏற்பட்டு வரும் மண் அரிப்பை தடுப்பதற்காக அடர்ந்து வளரக்கூடிய புல் விதைகளை தூவி அதன் மேல் தென்னை நார் கயிறு வலையை போர்த்தி புல் வளர்க்கப்பட்டு வருகிறது.

இதனால் கரைகள் சேதமடைவது தடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழகத்தில் முதன்முறையாக தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையின் வெளிப்புற கரையில் மண் அரிப்பை தடுப்பதற்காக ரூ.2 கோடியே 29 லட்சம் மதிப்பில் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணியை மதுரை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஞானசேகர், கண்காணிப்பு பொறியாளர் பழனிசாமி, பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

ஆய்வின்போது பெரியகுளம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், மஞ்சளாறு அணை கண்காணிப்பு பொறியாளர் தளபதி ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் முதல் முறையாக மஞ்சளாறு அணையில் கரையோரம் மண் அரிப்பை தடுப்பதற்காக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முழுமையாக செயல்படுத்திய பின்பு மழைக்காலங்களில் மண் அரிப்பை தடுப்பதில் இதன் பயன்கள் எவ்வாறு உள்ளது என்பது ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு மாநிலத்தில் உள்ள மற்ற கண்மாய், குளங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றனர்.


Related Tags :
Next Story