இடையன்குளம் கரையில் மரங்கள் வெட்டி கடத்தல்
கம்பம் அருகே இடையன்குளம் கரையில் மரங்களை வெட்டி கடத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கம்பம் அருகே உள்ள ஊத்துக்காடு, புதுப்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, திராட்சை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதி விவசாயத்தின் நீர் ஆதாரமாக ஊத்துக்காடு-கோம்பைச் சாலை பிரிவில் உள்ள இடையன்குளம் விளங்குகிறது. இந்த குளத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்யும்போது நீர்வரத்து ஏற்படும். மேலும் 18-ம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரும் குளத்தில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த குளத்தை பாதுகாக்கும் விதமாக குளத்தைச் சுற்றி கரைகள் அமைக்கப்பட்டு அதில் வேப்ப மரம், புளியமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கரையில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை வேரோடு வெட்டி கடத்தி செல்கின்றனர். மேலும் கரையையும் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை எழுந்துள்ளது. எனவே மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.