தடைசெய்யப்பட்ட பட்டியலில் ஒப்பந்ததாரர்கள் சேர்ப்பு


தடைசெய்யப்பட்ட பட்டியலில் ஒப்பந்ததாரர்கள் சேர்ப்பு
x

சாலை அமைக்கும் பணிகளில் காலதாமதம்செய்த ஒப்பந்ததாரர்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர்

சாலை அமைக்கும் பணிகளில் காலதாமதம்செய்த ஒப்பந்ததாரர்கள் தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

மனுநீதிநாள் முகாம்

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் முன்னிலை வைத்தார்.

பல்வேறு துறைகளின் சார்பில் 187 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

தடைசெய்யப்பட்ட பட்டியலில்

நமது மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது என்று புகார் வந்தது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 3 ஒப்பந்ததாரர்களுக்கு தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள நெக்கனா மலை கிராம பகுதியில் சாலை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் புது நாடு சாலை, காவலூர் சாலை அமைப்பதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு மாதங்களில் 40 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் ஆதார் எண்களின் விவரங்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், கலால் உதவி ஆணையர் பானு, நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் வெண்மதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story