காண்டிராக்டர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு
நாகர்கோவிலில் கைதாகி சிறையில் உள்ள காண்டிராக்டர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கைதாகி சிறையில் உள்ள காண்டிராக்டர் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காண்டிராக்டர் கைது
நாகர்கோவில் பார்வதிபுரம் அப்துல்கலாம் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 44), காண்டிராக்டர். இவர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கு உள்ளது. இதையடுத்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஜெயக்குமார் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பார்வதிபுரம் அப்துல்கலாம் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மெர்சி சுரேஷ் (64) வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
ஜெயக்குமாருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் எனது மகளுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார்.
பணம்- நகை மோசடி
இதற்காக ரூ.21 லட்சம் பணமும், நகைகளும் கேட்டார். நானும் அவரது பேச்சை நம்பி ரூ.21 லட்சம் பணமும், 63 பவுன் நகைகளையும் கொடுத்தேன். பணம் மற்றும் நகையை வாங்கிக் கொண்ட ஜெயக்குமார் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதனால் நான் கொடுத்த பணத்தையும் நகையையும் திருப்பி கேட்டேன். இதுவரை ரூ.16 லட்சம் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.5 லட்சம் மற்றும் 63 பவுன் நகையை கொடுக்காமல் மோசடி செய்து வருகிறார். இதுதொடர்பாக பலமுறை அவரிடம் கேட்டேன். இதையடுத்து எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தையும், நகையையும் மீட்டுதர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் மீது மோசடி உள்பட 7 பிரிவுகளில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.