ஆடி முதல் வெள்ளிக்கிழமை விழாக்கோலம் பூண்ட அம்மன் கோவில்கள்


ஆடி முதல் வெள்ளிக்கிழமை விழாக்கோலம் பூண்ட அம்மன் கோவில்கள்
x

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சென்னையில் உள்ள அம்மன் கோவில்கள் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆடிப்பூர வளையல் திருவிழா இன்று நடக்கிறது.

சென்னை,

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடியில் கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடக்கும். அதன்படி ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று சென்னையில் உள்ள அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது. அதிகாலை முதலே கோவில்களில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன், கோலவிழி பத்திரகாளியம்மன் கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கோவில் முன்பு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசிக்கும் வகையில் தடுப்பு கட்டைகளால் வழிப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டிருந்தது. கூழ்வார்த்து அதனை பக்தர்களுக்கு வழங்கினர். புற்றில் பால் ஊற்றியும், மாவிளக்கேற்றியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

பாலாபிஷேகம்

பாரிமுனை தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோவில், சூளை அங்காளபரமேஸ்வரி அம்மன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன், முத்தமிழ் நகர் பவானி அம்மன், தியாகராயநகர் முப்பாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் நெய் தீபம் ஏற்றி வைத்தனர்.

இன்று ஆடிப்பூரம்

ஆடிப்பூரமான இன்று (சனிக்கிழமை) கோவில்களில் அம்மனுக்கு வளையல் சாத்தும் திருவிழா நடக்க இருக்கிறது. தங்களுக்கு தாயான அம்மனுக்கு பக்தர்கள் விதவிதமான கண்ணாடி வளையல்களை அணிவித்து வழிபாடு நடத்துவதே ஆடிப்பூர திருவிழாவாக பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுவது காலம் காலமாக நடந்து வரும் முறையாகும். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரத்தையொட்டி இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்க இருக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அம்மன் கோவில்களில் கூழ்வார்க்கும் திருவிழா நடக்கிறது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நேற்று மாலை அம்மனுக்கு வளையல் காப்பு உற்சவம் நடைபெற்றது.


Next Story