லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் காய்ந்த மரங்களால் விபத்து அபாயம் :வெட்டி அகற்ற கோரிக்கை
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் காய்ந்த மரங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளளது. இதனால் அந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் குமுளி அமைந்துள்ளது. லோயர்கேம்ப்-குமுளி இடையே வனப்பகுதியாக உள்ளதால் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. தமிழக பகுதியில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்கு இந்த மலைப்பகுதி வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் வாகனங்களில் செல்கின்றனர்.
இந்த மலைப்பாதையில் அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள். சில இடங்களில் குறுகலான சாலை, தடுப்புக் கம்பிகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலங்களிலும் காற்று வேகமாக வீசும் போது மலைப்பாதையில் உள்ள காய்ந்த மரங்கள், கிளைகள் முறிந்து சாலைகளிலேயே விழுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து தடை ஏற்படுதுவடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் காய்ந்து நிற்கும் பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்ற மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.