தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி
தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மோட்டார் சைக்கிள் பேரணி
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று காலை நடந்தது. பேரணிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டார். மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மில்லர்புரம் ஆயுதப்படை அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி முத்துநகர் கடற்கரையில் முடிவடைந்தது. பேரணியில் மாவட்ட கலெக்டர், மேயர் மற்றும் அலுவலர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளிகளில் சாலைபாதுகாப்பு குழு
இதனை தொடர்ந்து சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சாலைகளில் ஏற்படும் மரணங்களை குறைப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். பள்ளி குழந்தைகளிடம் ஆரம்ப கட்டத்தில் இருந்தே, சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால் ஒரு நல்ல சமுதாயம் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுக்கள் மூலமாக சாலை பாதுகாப்பு விஷயங்கள் அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 350 முதல் 390 இறப்புகள் சாலை விபத்துக்களால் நடந்து உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு சராசரியாக 15 ஆயிரம் இறப்புகள் சாலை விபத்துக்களால் நடக்கிறது. அனைத்து துறைகளும் சேர்ந்து செயல்பட்டால் இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும். சாலைகள் சீரமைத்தல், சிக்னல்களை சரி செய்தல் போன்ற பணிகளும் நடந்து வருகிறது. அதே போன்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் போது விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழியபாண்டியன், மாவட்ட கல்வி அலுவலர் த.தமிழ்செல்வி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.