ஆடித்திருவிழாவையொட்டி செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
ஆடித்திருவிழாவையொட்டி சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஆடித்திருவிழா
சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்தேர்திருவிழா கடந்த மாதம் 15-ந் தேதி முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 26-ந் தேதி பூச்சாட்டுதல் நடந்தது.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களாக பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள். மேலும் அலகுகுத்தி பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேரோட்டம்
இந்த நிலையில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபதி, குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடித்து ேதரை இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேர் அப்புச்செட்டி தெரு, கபிலர் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சந்தைப்பேட்டை மெயின் ரோடு, முக்கோணம் தெரு, செவ்வாய்பேட்டை மெயின் ரோடு வழியாக மீண்டும் நிலையை அடைந்தது.
வண்டிவேடிக்கை
இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வண்டிவேடிக்கை, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சத்தாபரணம், 16-ந் தேதி வசந்த உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.